வேளச்சேரி: போதையில் பைக்குகளை உடைத்த சிறுவன்; விசாரணை
பெரும்பாக்கம் எழில் நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 56வது பிளாக்கில், 96 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் நேற்று முன்தினம் இரவு தங்களது பைக்குகளை, தரை தளத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இரவு 11. 30 மணிக்கு இந்த பிளாக் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து, 4வது மாடியில் வசிக்கும் பாத்திமா (40) வெளியில் வந்து பார்த்தபோது, அவரது மொபட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை, போதையில் இருந்த சிறுவன் அடித்து உடைப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், வாகனங்களை சேதப்படுத்திய 17 வயது சிறுவனை மடக்கிப் பிடித்தனர். அப்போது, சிறுவன் போதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.