
சென்னை: ஞானேகரனுக்கு மட்டுமே தொடர்பு; குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் யாரிடமோ 'சார்' என்று பேசியதாக தகவல் வெளியானநிலையில், யார் அந்த 'சார்' என எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் யாரோ ஒருவரிடம் பேசுவது போல் நடித்து, அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காக தொலைபேசியில் 'சார்' என்று அழைத்ததாகவும், உண்மையில் மறுபுறம் யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்திற்குள் நுழைந்ததிலிருந்து அவர் தனது பைக்கில் புறப்படும் வரை அவரது மொபைல் போன் 'ஃப்ளைட் மோடில்' இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.