மதுவிலக்கு மாநாடு என்ற பெயரில் அரசியல் கூட்டணிக்கு திருமாவளவன் ஆதரவு தேடுகிறார் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மூன்று நாட்களாக ஆட்சியில் பங்கு என்ற தொனியில் விசிக தலைவர் திருமாவளவன் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி புதிதாக தன் கட்சியில் இணைத்துக் கொண்ட ஒரு தொழிலதிபரின் ஆசை வார்த்தைகளால் கவரப்பட்டு, அதன் அடிப்படையில் மனதின் குரலாகவும், அட்மின் குரலாகவும் ஊடகங்களில் பொய் பிம்பங்களை உருவாக்கி பரப்பி வருகிறார். கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மறந்துவிட்டு தற்போது ஏதோ புதிய பாதையை தேர்ந்தெடுத்து விட்டது போல் புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியுடன் தான், இனி உறவு, இனி தேர்தல் கூட்டணி என்று விசிக தலைவர் திருமவளவன் துணிந்து அறிவிக்க வேண்டும். அதை விடுத்து புதிய செய்திகளை பரப்பி தங்களையும் குழப்பிக்கொண்டு அனைவரையும் குழப்ப முயற்சிக்க வேண்டாம்.
நீங்கள் மதுவிலக்கு கூட்டம் என்ற பெயரில் அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தேடுவதற்கு மடைமாற்றம் செய்ய பயன்படுத்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை உணர வேண்டும். மக்கள் விரோத திமுக அரசை தமிழகத்தில் அகற்றுவோம் என்று அறிவியுங்கள் என கூறப்பட்டுள்ளது.