அரசுப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள இலவச நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களில் நாப்கின்கள் வைக்கப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும், பழுதாகி, காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் நாளிதழில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், பெண் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த வல்லி தாக்கல் செய்த வழக்கில், நாப்கின் இயந்திரங்கள் வைப்பது, பராமரிப்பது தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியது. இந்த வழக்கை எண்ணிட்டு செப்டம்பர் 12ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு அமல்படுத்தப்பட்டால், அது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.