டெல்லியில் நடைபெற்ற 'பிக்கி' சர்வதேச கருத்தரங்கில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத் திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வர்த்தகம், தொழில் கூட்டமைப்பு (FICCI) சார்பில், டெல்லியில் நடைபெற்ற 14-வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் வழங்கப்பட்ட இந்திய விளையாட்டு விருதுகளில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை அங்கீகரித்து விருதை வழங்கியது. இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலர் முருகானந்தம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.