வீண் விளம்பரங்களை விடுத்து தமிழகத்துக்கு தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று(செப்.13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54ம் மாநாட்டின் போது மராட்டிய முதல்வர் ஷிண்டே தலைமையிலான குழு மொத்தம் ரூ. 3. 53 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றின் பெரும்பாலானவை அமெரிக்க முதலீடுகள் ஆகும். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் தான். இதை செய்தால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தானாக குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.