கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், எதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி-யின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி. பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கள்ளச்சாராய மரணம் தொடர்பாகபோலீஸாருக்கு எப்போது தகவல்கிடைத்தது, முதல் உயரிழப்பு எப்போது நடந்தது, யார், யார் எந்தெந்த மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர், பலர் இறந்துவிட்டனர் என மருத்துவர்கள் தகவல்தெரிவித்த பிறகுதான் போலீஸாருக்கு தகவல் தெரியுமா, உயிரிழப்பு சம்பவத்துக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என எதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார், பின்னர் எதற்காக மாவட்டஎஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்தீர்கள், பின்னர் எதன் அடிப்படையில் எஸ்பி-யின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது, மற்ற போலீஸார் மீதான நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்ற விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.