யார் வேண்டுமானாலும் வரட்டுமே களத்தில் சந்திப்போம் என தைரியம் இருக்க வேண்டும். திமுகவுக்கு அந்த தைரியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக துணை முதலமைச்சர் தமிழகம் வந்துள்ள இந்த சுழலில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருந்திருக்க வேண்டும். அவருடன் மேகதாது பிரச்சனை குறித்து விவாதித்து இருக்க வேண்டும். ஆனால் துரைமுருகன் சிங்கப்பூரில் உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினும் வெளிநாட்டில் உள்ளார்.
அவர்களுக்கு தமிழ்நாடு நலன் குறித்து அக்கறை இல்லை. தமிழகத்தில் ஒரு கபட அரசாங்கம் தான் நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தூங்க மூஞ்சு அரசாங்கமாக செயல்படுகிறது.
விஜயை கண்டு திமுக பயப்படுவது ஏன்? விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுகவுக்கு தான் பாதிப்பு என அவர்கள் நினைக்கிறார்கள். 2026 தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக தான் மக்கள் வாக்களிப்பார்கள். திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு தான் வரும். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரட்டுமே களத்தில் சந்திப்போம் என தைரியம் இருக்க வேண்டும். திமுகவுக்கு அந்த தைரியம் இல்லை என தெரிவித்தார்.