தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது.
மேலும், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் பதிவானது. இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை, பல இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.