தமிழகத்தில் நேற்று (செப்.12) வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மதுரையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு 3 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருவதை அடுத்து, பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஈரோடு, கரூர், திருச்சி, தூத்துக்குடி, மாவட்டங்களில் 101 டிகிரியும், சென்னை, காரைக்கால், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் 99 டிகிரியும் வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 90 டிகிரி வெயில் நிலவியது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 18ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.