தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறவிருக்கும் சூழலில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை ‘வருங்கால முதல்வரே’ என்று குறிப்பிட்டு செங்கல்பட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையான நிலையில் அது பற்றி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.
தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர், இது விஷமிகளின் செயல். தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர். 2026 தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராவார். காலை 10 மணிக்கு பொதுக் குழு தொடங்குகிறது. இந்நிலையில் சில விஷமிகள் வேண்டுமென்றே இத்தகைய போஸ்டரை ஒட்டியுள்ளனர். இது குறித்து கட்சியினர் விசாரித்து வருகின்றனர் என்று கூறினார்.
அதிமுக முன்னாள் நிர்வாகியின் ட்வீட்: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தவெக முதல் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெறும் சூழலில் அதிமுக முன்னாள் நிர்வாகியான மருது அழகுராஜ் இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில், "இலை"யுதிர் காலத்தை தனக்கான வசந்த காலமாக்கும் விஜய். அதிமுக இடத்தை தவெக கைப்பற்றுகிறது. "இராமச்சந்திரா" மாநாட்டு மண்டபத்தில் முதல் பொதுக்குழு. வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். அதிமுக வீழும் சூழலில் இருப்பதாகவும் அதை தவெக பயன்படுத்திக் கொள்வதாகவும் பொருள்படும்படி அவர் இந்த ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டுடன் எம்ஜிஆர் படத்தையும் விஜய் படத்தையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார்.