குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் அக். 14-ல் ஆஜராக உத்தரவு

72பார்த்தது
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் அக். 14-ல் ஆஜராக உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வரும் அக்டோபர் 14 அன்று நேரில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், பி. வி. ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி டி. கே. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ், வணிக வரித்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் 250 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களுடன், சுமார் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் பென்-டிரைவில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெற ஏதுவாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும், என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி