
சென்னை: இரட்டிப்பு லாபம் தருவதாக மோசடி: இருவர் கைது
சென்னை கொளத்தூர், சம்தரியா காலனியைச் சேர்ந்தவர் ஜமுனா (28). இவரும், இவரது கணவர் பாலாஜியும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஜமுனாவிற்கு அறிமுகமான வண்டலூரைச் சேர்ந்த ஹரிஷ் (29) ஜமுனா மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்டு, எனது நண்பர் சூளைமேட்டைச் சேர்ந்த சதீஷ் (32) துரைப்பாக்கம் பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜமுனா, தங்களிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். உடனே ஹரிஷ் அவரது நண்பர் சதீஷ் மூலம் வங்கியில் கடன் ஏற்பாடு செய்துத் தருவதாகவும், மாத தவணைகளை நிறுவனத்திலிருந்து செலுத்திவிடுவதாகவும் கூறி ஜமுனாவை நம்பவைத்து அவரது பெயரில் பல வங்கிகளில் ரூ. 65 லட்சத்து 56 ஆயிரத்துக்கு கடன் பெற்று நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பேசியபடி மாத தவணைகளை சரியாக செலுத்தாமல், சதீஷ், ஹரிஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் இதுகுறித்து கேட்ட ஜமுனாவிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஜமுனா இதுதொடர்பாக ஒட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிந்து ஹரிஷ், சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.