சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 17) ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, வீனஸ்நகர் பம்பிங் ஸ்டேஷன், ரெட்டேரி தெற்கு உபரி நீர் வெளியேற்றம், பாலாஜி நகரில் நடைபெற்ற மருத்துவ முகாம், தணிகாசலம் கால்வாய், திருவள்ளுவர் திருமண மண்டபம், காமராஜர் நாடார் சத்திரம் போன்ற பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் அளித்த அறிக்கையை வெளியிடவில்லை, அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, “இதை அரசியலாக்கும் முயற்சி செய்கின்றனர். எவ்வளவு பணிகள் நடைபெற்றுள்ளன என்பது மக்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை அரசியலாக்கி வியாபாரப் பொருளாக்க நினைக்கின்றனர். அதை நான் விரும்பவில்லை, ” என்றார்.