தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இது தொடர்பான அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில், இதற்கு பதிலளித்து, திமுக சட்டத்துறைச் செயலர் என்.ஆர். இளங்கோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவை கொள்கைரீதியாக தொடர்ந்து எதிர்க்கும் கட்சிகளையும், மாநில அரசுகளையும் பழிவாங்குவதற்காக, மத்திய அமைப்புகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் மத்திய அரசின் மேலும் ஒரு நடவடிக்கையாக, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக்கடன் வழக்கை தூசிதட்டி எடுத்து, எவ்வித ஆதாரமின்றி தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை பற்றிய பல தவறான தகவல்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்கத்துறை நடவடிக்கையானது, ஒரு தனியார் நிறுவனம் வாங்கிய வங்கிக்கடன் பற்றியதாகும். இந்த கடன்தொகை முழுவதும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் எந்தவிதமான முறைகேடும் இல்லை. மேலும், இந்த வழக்கை சிபிஐ அமைப்பு விசாரிப்பதற்கு, முதல் ஆதாரம் எதுவுமில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.