மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை, பாரிமுனையில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது.
நடுத்தர மக்களுக்கு ஆதரவு என்று கூறுவது நடுத்தர மக்களை ஏமாற்றும் செயலாகும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு கடன் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.