தாம்பரம் மாநகராட்சிக்கு சிட்லபாக்கத்தில் உள்ள 4. 69 ஏக்கர் நிலத்தில், புதிய அலுவலகம் கட்ட ரூ. 43. 40 கோடிக்கு நிர்வாக அனுமதியளித்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாம்பரம் மாநகராட்சிக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு ரூ. 10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் போதிய இடவசதி இல்லாத நிலையில் இயங்கி வருவதால் போதிய வசதிகளுடன் புதிதாக மாநகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட வேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே, தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கு சிட்லப்பாக்கம் கிராமத்தில் உள்ள 4. 69 ஏக்கர் ‘அரசு புறம்போக்கு’ இடத்தினை மாநகராட்சி பெயருக்கு உரிமை மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்காக ரூ. 43. 40 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இப்புதிய அலுவலக கட்டடம் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களை கொண்டிருக்கும். மொத்தம் 12, 441 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது என. தெரிவிக்கப்பட்டுள்ளது.