அரூரில் எம்ஜிஆர் சிலை அகற்றப்படாது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

60பார்த்தது
அரூரில் எம்ஜிஆர் சிலை அகற்றப்படாது: ஐகோர்ட்டில் அரசு தகவல்
அரூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக எம்ஜிஆர் சிலை அகற்றப்படாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக அங்குள்ள எம்ஜிஆர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அரூர் முன்னாள் எம்எல்ஏ-வான ஆர். ஆர். முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், கடந்த 36 ஆண்டுகளாக அரூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்றுவது என்பது எம்ஜிஆர் மீது பற்றுள்ள தொண்டர்களின் உணர்வுகளை பாதிக்கும். இதுதொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக எம்ஜிஆர் சிலையை அகற்றக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “அரூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்றுவது தொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை” என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இதுதொடர்பாக மனுதாரர் வரும் ஜூலை 31-ம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டும் மனு அளிக்க வேண்டும். அந்த மனு மீது இரு வாரங்களில் மாவட்ட ஆட்சியர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி