எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி: ரயில்வே அறிவிப்பு
எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, சிலம்பு உட்பட 3 விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மற்றும் சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்க பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், 3 ரயில்களின் சேவையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு, மறுஉத்தரவு வரும் வரை இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விரைவு ரயில் (22663) நவ. 23-ம் தேதி முதல் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படும். ஜோத்பூர் – எழும்பூர் விரைவு ரயில் (22664), நவ. 26-ம் தேதி முதல் தாம்பரத்துக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் (12667), வரும் 21-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு இயக்கப்படும். அதுபோல, நாகர்கோவில் – எழும்பூர் விரைவு ரயில் (12668) வரும் 22-ம் தேதி முதல் தாம்பரம் வரை இயக்கப்படும். சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் (20681) நவ. 20-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 8:55 மணிக்கு இயக்கப்படும். செங்கோட்டை – தாம்பரம் விரைவு ரயில் (20682) நவ. 21-ம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.