
சென்னை: பிரதமர், பாடகி புகைப்படங்களை பயன்படுத்தி முதலீட்டு மோசடி
பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்தி முதலீட்டு இணைய தளங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், சுதா மூர்த்தி, சத்குரு போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள், காணொலிகளை பயன்படுத்தி, அவர்கள் குறிப்பிட்ட சில வர்த்தக தளங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பது போன்று பதிவுகளை வெளியிட்டு அந்த பதிவை கிளிக் செய்யும்போது, அது போலியான வலைதளங்களுக்கு திருப்பிவிடப்பட்டு, அதன்மூலம் போலியான மோசடி முதலீடுகள் நடைபெறுவதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர். அதேபோல், பிரதமர் மோடி, சத்குரு உள்ளிட்டோரின் புகைப்படங்கள், காணொலிகளை பயன்படுத்தி முகநூலில் முதலீட்டு மோசடிகளை ஊக்குவித்த 18 பதிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 15 வலைதளங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டோ புகார் அளிக்கலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.