நீர் பிளஸ் தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பம்
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 'நீர் பிளஸ்' தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. இதற்காக மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது. 'தூய்மை இந்தியா 2.0' திட்டத்தின்கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026ம் ஆண்டுக்குள் கழிவுநீர் வசதியை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்வது மற்றும் கழிவுநீரை முழுமையாக அகற்றுவதை நோக்கமாக கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை அகற்றுவதற்கான உள்கட்டமைப்பை சிறப்பாக கையாளும் மாநகருக்கு 'நீர் பிளஸ்' (Water +) எனும் தரச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இத்தரச்சான்றை பெற மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. சென்னை மாநகரம் கழிவுநீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது. அதனால் நீர் பிளஸ் நகரம் எனும் அங்கீகாரத்தை பெற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் 15 நாட்களுக்குள்ளாக solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.