தமிழகத்தில், அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 5. 30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 22ம் தேதி காலை, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 23ம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி காலை, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா–மேற்குவங்க கடற்கரை பகுதிகளை அடையக்கூடும்.
இதன் காரணமாக, நாளை திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.