விஜய்யின் தவெக கொடியில் ‘யானை’: பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு

75பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் வெளியிட்ட வீடியோ பதிவில், 1968-ம் ஆண்டு சின்னம் ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வடிவமைக்கும்போது இச்சட்டம் தொடர்பாக அவர்களின் கவனத்துக்கு வந்திருக்காது என தெரியவந்தது.

இதனால் அக்கட்சித் தலைமையை தொடர்பு கொள்ளுமாறு பகுஜன் சமாஜ் மத்திய தலைமையிடம் இருந்து அறிவுறுத்தல் பெறப்பட்டது. அதனடிப்படையில் தவெக நிர்வாகி வெங்கட் என்பவரை தொடர்பு கொண்டோம். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சட்ட ஆவணங்களையும் மத்திய தலைமையின் அறிவுறுத்தல்படி அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கின்றனர். அது நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி