தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ. 90. 52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ‘பிஎஸ் 6’ வகையைச் சோ்ந்த 150 அதிநவீன பேருந்துகள் ரூ. 90. 52 கோடி மதிப்பிலான வாங்கப்பட்டுள்ளன.
இப்பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்றது. இதில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பேருந்தில் ஏறி, அதன் சிறப்பம்சங்களையும் பாா்வையிட்டாா்.