
குன்னம்: வயல்களில் மூட்டை மூட்டையாக மக்காசோளம் திருடிய 3 பேர் கைது
குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகன் உத்தமண்டலம் (வயது 37), ராஜேந்திரன் மகன் வடிவேலன் (35), செழியன் மகன் சரத்குமார் (25). இவர்கள் 3 பேரும் வரகூர், குன்னம், அந்தூர், புதுவேட்டக்குடி, பரவை மற்றும் குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்காச்சோள வயல்களில் விளைந்த மக்காச்சோள கதிர்களை உடைத்து சுத்தப்படுத்தி வயல்களில் குவித்து விவசாயிகள் விற்பனைக்காக சேமித்து வைத்திருக்கும் மக்காச்சோளத்தை இரவு நேரங்களில் சென்று மூட்டை மூட்டையாக டிராக்டரில் ஏற்றி திருடிச்சென்றுள்ளனர். இந்நிலையில் வரகூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரது வயலில் மக்காச்சோளத்தை திருடியபோது அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை பிடித்து வைத்திருந்தவர்கள், இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார். இதையடுத்து 3 பேரும் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 பேரும் திருடிய 300 கிலோ மக்காச்சோளத்தையும், திருட பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் குன்னம் போலீசார் பறிமுதல் செய்தனர்.