பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (பிப்.21) பகல் 1 மணியளவில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில், மாவட்டத் தலைவர் கொளஞ்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பணியின் போது மரணமடைந்த, காஞ்சிபுரம் மற்றும் உடுமலை பகுதியைச் சேர்ந்த பிரியா மற்றும் சரண்யா குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிட வேண்டும், ஊழியர்களுக்கு முதல் வாரத்தில் சம்பளம் வழங்கிட வேண்டும், தொற்று நோய் பணிகள் செய்ய நிர்ப்பந்திக்க கூடாது, பணி வரையறை செய்ய வேண்டும், ஆய்வு கூட்டத்தில் தரக்குறைவாக பேசுவதை தவிர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கும், சுகாதார துறைக்கும், மற்றும் மகளிர் திட்ட நிர்வாகத்திற்கும், முன் வைத்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில் இதற்கு தீர்வு இல்லை என்றால் விரைவில் அடுத்த கட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கநாதன், செயலாளர் அகஸ்டின், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் செல்வி, பொருளாளர் வேணி, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.