விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வேளாணூரணி ஊராட்சிக்குட்பட்ட வளையப்பட்டி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிறிய பீடமாக காட்சியளித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரமாண்டமாக பெரிய கோயிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக அதே கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சார்ந்த இரு தரப்பினர் இடையே நெடுங்காலமாக பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு தரப்பினர் தங்களது தரப்பு 100 குடும்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்த வேண்டும் எனவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் இது தொடர்பாக அவர்கள் வட்டாட்சியரிடமும் மனு அளித்த நிலையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.