ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முதல் கால பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சாமி தரிசனம் செய்பவர்களுக்கு உடலில் உள்ள பிணிகளை குணமாக்கி தருவார் என்று ஐதீக நம்பிக்கையோடு ஏராளமான பக்தர்கள் நாள் தோறும் வந்து தரிசனம் செய்து செல்வர். மேலும் மகாசிவராத்திரி தினமான இன்று சுவாமி, அம்பாளுக்கு முதல் கால பூஜையில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய குடத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி மற்றும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு பால், சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரகாரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று, உற்சவ மூர்த்திகள் மூன்று முறை திருக்கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.