

சிவகாசி: அக்னிசட்டி எடுக்கும் பக்தர்கள் கூட்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமையன்று பங்குனிப் பொங்கல் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் இரவு ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்கார வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சட்டி எடுத்தல், கயிறு குத்து, கரும்பு குழந்தை தொட்டில் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இதற்காக அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் உடலில் தண்ணீரை ஊற்றியபடி மேலும் ஏராளமான ஆண், பெண் நேர்த்திக்கடனை செலுத்து வருகின்றனர். மேலும் நேர்த்தி செலுத்தும் அவர்களது உறவினர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றியபடி ஓம்சக்தி, பராசக்தி என்று பயபக்தியுடன் கோஷமிட்டபடி உடன் வருகின்றனர். பங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழா வரும் 10ம் தேதி (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது.