சிவகாசி அருகே ஆம்னி பேருந்து விபத்து. டிரைவர் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீ்ப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு சிவகாசியில் 6 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தை சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன்(35) என்பவர் ஓட்டிச் சென்றார். சிவகாசி - சாத்தூர் நெடுஞ்சாலையிலுள்ள அனுப்பன்குளம் அருகே சென்ற போது எதிரே வந்த பைக் மீது, ஆம்னி பேருந்து மோதியது. இதில் பைக்கில் வந்த மீனம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்னி பேருந்து மோதி சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீபிடித்ததில் தீ பேருந்து முழுவதும் பரவியது. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்கி ஓடினர். சில வினாடிகளில் ஆம்னி பேருந்து மற்றும் டூவீலர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் ஆம்னி பேருந்து எலும்பு கூடாக காட்சியளிதத்து. தீ பற்றியதும் பயணிகள் உடனடியாக பேருந்து விட்டு இறங்கியதால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்னி பேருந்து டிரைவர் மாரீஸ்வரன் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.