புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டிருந்தது. தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு, மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 3042 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன, இந்த சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், விருதுநகர் அதலக்காய், சாத்தூர் வெள்ளரி, இராஜபாளையம் மாம்பழம், கொடுக்காப்புளி மற்றும் பஞ்சவர்ணம் மாம்பழம் புவிசார் குறியீடு வாங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது