சாத்தூரில் மது போதையில் இருந்தவர் கழிவு நீரில் விழுந்த சிசிடிவி காட்சியால் பரபரப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறை சார்பாக கழிவு நீர் கால்வாய் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தூர் பேருந்து நிலையம் செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டன. மேலும் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீர் தேங்கி உள்ளது. அதே பகுதியில், கழிவு நீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் சாலையோரமாக மது போதையில் படுத்திருந்த நபர் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கழிவு நீர் நிரம்பிய கால்வாய் பள்ளத்தில் விழுந்த நபரை அருகில் இருந்தவர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர். மது போதையிலிருந்த நபர் பள்ளத்தில் விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக சாத்தூர் நகர் பகுதியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சாலையின் ஓரங்களில் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட குழிகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி உள்ளதால் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட குழிகளை சுற்றி எச்சரிக்கை பலகைகள் வைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.