விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மேட்டுத்தொட்டியாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி(48). இவர் பூ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். முனியாண்டி தினமும் வேலையை முடித்துவிட்டு பூ மார்க்கெட்டில் இருந்து விவிஆர் காலனி வழியாக மேட்டுத் தொட்டியாங்குளத்திற்கு நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எஸ். பி. கே கல்லூரி அருகே பழைய மர சாமான்கள் கடை வைத்திருக்கும் விவிஆர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி(39) என்பவர் தினமும் முனியாண்டியிடம் இவ்வழியாக செல்லக்கூடாது என மது போதையில் பிரச்சனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முனியாண்டிக்கும், முத்துப்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முனியாண்டி வழக்கம் போல் விவிஆர் காலனி வழியாக நடந்து கொண்டு இருக்கும்போது எஸ்பிகே கலைக்கல்லூரி முன்பு முனியாண்டியை வழிமறித்த முத்துப்பாண்டி மற்றும் அவரது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த அருண்(23) இருவரும் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துப்பாண்டி மற்றும் அருண் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.