விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறவழிச்சாலையை இணைக்கும் இ-3 சாலை என்ற சாலை திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. மணிநகரம், பெர்கின்ஸ்புரம், மீனாம்பிகை நகர், ரயில்வே பீடர் ரோடு, விவிஆர் காலனி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ரூ 8 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த இ-3 சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நல்லூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் அனைத்து கட்சியினர் இணைந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடைகளை அடைத்து புதிய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. முதலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.