விழுப்புரம்: மழையால் பணிகள் தாமதம் தள்ளிப்போகிறதா த. வெ. க. , மாநாடு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலை என்ற இடத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல், வரும் 24ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு செய்து வருகின்றனர். கட்சி தலைவர் விஜய், மாநாட்டு மேடையை சென்றடையும் வகையில் தார்சாலை, மேடையின் நடுவே பார்வையாளர்களை பார்த்து கையசைக்கும் வகையில் விஜய் நடந்து வர வசதியாக ரேம்ப் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் முழுதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. மாநாடு நடைபெறும் தேதி வரை மழை பெய்தால் இதை நிலை நீடிக்கும் இந்நிலையில், நேற்று பிற்பகல் மாநாட்டில் சுகாதார ஏற்பாட்டிற்காக மருத்துவ குழுவினர் வந்து பார்வையிட்டு, மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த்திடம் ஆலோசனை செய்தனர். மழை தொடர்ந்து பெய்தால் மாநாடு நடைபெறும் தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.