கள்ளக்குறிச்சி மாவட்டம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை.
ஏழுமலைக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அவர் பாத்தியத்தில் இருந்த 30 சென்ட் இடத்தினை அரசிடமிருந்து பட்டா பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தினை ஏழுமலை தனது மனைவி மகாலட்சுமி பெயருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார். இதனை எதிர்த்து, தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஏழுமலைக்கு அரசு பட்டா வழங்கியதில் உரிய நடைமுறை பின்பற்றவில்லை என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில், கடந்த 18ஆம் தேதி திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஏழுமலைக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், மீண்டும் தனக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி, ஏழுமலை தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 14 வயது மகளுடன் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். இதனை எடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அனுப்பி உரிய தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்து அவர்களை
அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அங்கிருந்து அவர்கள் செல்லாததால், திருக்கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மூவரையும் கைது செய்த போலீசார் அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.