விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பாதாள சாக்கடை பணியானது நடைபெற்று வருகிறது. அவசரகதியில் அலட்சியமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியில் தோண்டப்பட்ட பழங்களில் வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்படுவது ஒரு புறம் இருக்க, மேம்பாலத்தின் ஒரு பகுதி புணரமைப்பு பணிக்காக மூடப்பட்டதால் திண்டிவனத்தில் மையப்பகுதிக்கு செல்ல பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே சுரங்க பாதையை கடந்து செல்ல வேண்டும். மாற்று வழி எதுவும் இல்லை. அவ்வாறு இருக்க திண்டிவனம் மையப்பகுதியில் பாதாள சாக்கடை பணியால் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டி இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடிய அவல நிலை தற்போது நிலவி வருகிறது.
இந்த நிலையில் நாளை தை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், வார விடுமுறை தினங்கள் என்பதாலும் கடும் வாகன போக்குவரத்து திண்டிவனம் நகரில் காணப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் ஒட்டிய ரயில்வே சுரங்க பாதையை கடந்த அரசு நகரப் பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் ஏறி நின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சரியாவதற்கு சுமார் 30 நிமிடத்திற்கும் மேல் ஆனது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.