திண்டிவனத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் நுாதன முறையில் ரூ. 2. 90 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
திண்டிவனம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜான் சாகயராஜ், 65; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில், நேரு வீதியில் உள்ள ஸ்டேட் பாங்கில் தனது மனைவி ரீட்டா வங்கி கணக்கில் இருந்து ரூ. 290 லட்சம் பணத்தை எடுத்து தனது ேஹாண்டா ஸ்கூட்டரில் சீட்டிற்கு அடியில் வைத்து கொண்டு, தாலுகா அலுவலகம் அருகே ஆர். எஸ். பிள்ளை தெருவில் தனியார் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்க சென்றார்.
வங்கி அருகே சென்றபோது, அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் ஜான் சகாயராஜியிடம், கீழே சிதறி கிடக்கும் 50 ரூபாய் நோட்டுகள் உங்களுடையதா என கேட்டார். உடன் ஜான் சகாயராஜ், ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, பணம் கிடந்த இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு திரும்பிய போது, ஸ்கூட்டர் அருகில் வங்கி சலான்கள் சிதறி கிடந்தது. சீட்டை துாக்கி பார்த்த போது, உள்ளே வைத்திருந்த ரூ. 2. 90 லட்சத்தை யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஜான் சகாயராஜ் கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார், மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.