விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பால சித்தர், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் ஆகிய கோவில்களின் திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவானது கடந்த 15ம் தேதி ஸ்ரீ விநாயகர், பால சித்தர், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வழிபாடு இறை அனுமதி பெறுதல் மகா கணபதி வேள்வி, திருமகள் வேள்வியுடன் துவங்கியது.
தொடர்ந்து 6 கால யாகசாலை வேள்வி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இன்று 6 வது கால யாகசாலையை தொடர்ந்து பூஜிக்க்கப்பட்ட கலசங்கள் கயிலாய வாத்தியங்கள் முழங்க கோபுர உச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து புனித நீரானது கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா, கந்தனுக்கு அரோகரா, மயிலம் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர்.
மயிலத்தில் நடைபெறும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம், புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி, சென்னை உள்ளிட்ட கலந்து கொள்வார்கள் என்பதால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் 500க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.