மாணவியிடம் ரூ4½ லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

2248பார்த்தது
வேலூரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை தொடர்பாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் சில பொருட்களுக்கு மதிப்பீடு செய்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினால் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரும் அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த இணையதளத்துக்கு சென்று அதில் உள்ள சில பொருள்களுக்கு மதிப்பீடு செய்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினார். அதற்கான கமிஷன் தொகையும் அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து அவர் இதுபோன்று சில பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் மர்மநபர்கள் அவரிடம் பணம் முதலீடு செய்து பணிகளை மேற்கொண்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதை நம்பிய அவர் தொடர்ச்சியாக பணத்தை முதலீடு செய்தார். ஒருக்கட்டத்தில் ரூ. 4 லட்சத்து 63 ஆயிரத்து 800 வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணத்தை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. பின்னர் அவர் மர்மநபர்களை தொடர்பு கொண்ட போது தொடர்ந்து முதலீடு செய்தால் பணத்தைபெற முடியும் என தெரிவித்தனர்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி