வேலூர்- ஆற்காடு சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் 2 நாட்கள் அகற்றும் பணி நடந்தது. அப்போது தனியார் மருத்துவமனை அருகே வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார் டிரைவர் தொழிற்சங்க பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சி. ஐ. டி. யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று முன்தினம்
ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதுகுறித்து வேலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி. ஐ. டி. யூ. வேலூர் மாவட்ட செயலாளர் பரசுராமன் உள்பட 30 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.