காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்டது பாணாவரம் ஊராட்சி. இப்பகுதியில் ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை, ரெயில் நிலையம், அரசு, தனியார் மருத்துவமனை, அரசு பள்ளிகள், காவல் நிலையம், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன. இப்பகுதிக்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் நாள்தோறும் அன்றாட தேவைகளுக்கு வந்து செல்வதால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்த நிலையில் பாணாவரம் ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள சாலையின் சமீப காலமாக சாலையை ஆக்கிரமித்து கடைகள் அதிகரித்து வருகிறது. இதேபோல் சில தனியார் கம்பெனி பஸ்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி விடுகிறார்கள். மேலும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு முன்கார். இருசக்கர வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை கடப்ப தற்குகடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பொதுமக்கள் கூறுகையில், பாணாவரம் சாவடி பகுதி அருகே ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடை முன்பு மற்றும் மேம்பாலம் கீழே உள்ள சாலையில் சாலையோர வியாபாரம் அதிகரித்து வருகிறது. இதனால் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.
இதிலும் ஒரு சில வியாபாரிகள் கடைக்கு நிரந்தரமாக இடம் பிடிக்க சாலை ஓரத்தில் பழபெட்டிகள், பெரிய கற்கள் வைத்தும், வியாபாரத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களை அங்கேயே நிறுத்தியும் விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. எனவே இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை சார்ந்த அலுவலர்கள் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.