வேலூர்: பிரசவத்திற்கு பயந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பெண்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மேல்ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா (29) இந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் பிறந்தன. இதில் 2 குழந்தைகள் இறந்துள்ளன. தற்போழுது 5 குழந்தைகள் நலமாக உள்ளனர். இந்நிலையில் 8 வது முறையாக அமுதா கர்ப்பிணியானார். நிறைமாத கர்ப்பிணி அமுதா அருகிலுள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார். மேலும் பிரசவத்திற்காக அமுதா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திடீரென மருத்துவமனையிலிருந்து 8வது பிரசவத்திற்கு பயந்து கொண்டு சொல்லாமல், திடீரென நேற்று முன்தினம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், வருவாய் துறையினர்க்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள் செவிலியர்கள் வருவாய்த்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்ஆலாங்குப்பம் கிராமத்தில் கர்ப்பிணி அமுதாவின் வீட்டிற்கு சென்று பிரசாந்த் அமுதா தம்பதியினர்க்கு அறிவுரை கூறி அமுதாவை பிரசவத்திற்காக ஆம்புலன்சில் ஏற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அமுதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.