வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பரத்குமார்( 24 ). இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே நேற்று இரவு தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பரத்குமாரை வழிமறித்து இரும்புராடால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பிவிட்ட நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் மடக்கி பிடித்த பொதுமக்கள் இதுகுறித்து மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி போலீசார் பொதுமக்களிடமிருந்து இருவரையும் மீட்டு சென்று காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவர்கள் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த வினித்( 20) மற்றும் சரண்( 19)என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் முன் விரோதம் காரணமாக பரத்குமாரை மிரட்டுவதற்காக தங்களை அனுப்பியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தலையில் காயம் அடைந்த பரத்குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி மற்றும் பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.