வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது நேற்றைக்கு முன்தினம் இரவு பெய்த கனமழையால் காட்பாடி பகுதியில் மட்டும் சுமார் 14 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகி இருந்தது இதனால் பழைய காட்பாடி சாலை, முத்தமிழ் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் கழிவுநீரோடு சேர்ந்து மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். சாலையில் தேங்கி நின்ற மழை நீரால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவும் காட்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 68 மில்லி மீட்டர் அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும் இரண்டாவது நாளாக பழைய காட்பாடி சாலை, முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இரண்டாது நாளாக கழிவு நீரோடு சேர்ந்து மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் நோய் தொற்று ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். மேலும் திருவலம் செல்லும் பழைய காட்பாடி சாலையில் வெள்ளம் போல் மழை நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு மழை பொழியும்போதும் இதே போன்ற சூழலை இங்குள்ள மக்கள் சந்தித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.