போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தவர் பணி நீக்கம்!

67பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், ரத்தினகிரி அருகே உள்ள மேலக்குப்பம் கொல்லை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (49). இவர் கடந்த 3. 9. 2021 அன்று மேலகுப்பம் ஊராட்சி செயலாளராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் பணியில் சேர்ந்த போது கொடுத்த 10-ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என புகார் எழுந்தது.

அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் கிருபாகரன் பணியில் சேரும் போது கொடுத்த 10-ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து ஊராட்சி செயலாளர் கிருபாகரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் துறைரீதியான விசாரணை நடந்தது. இதிலும் போலி சான்றிதழ் கொடுத்து கிருபாகரன் பணியில் சேர்ந்தது உறுதியானது.

அதைத்தொடர்ந்து கிருபாகரனை பணி நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். இந்த நிலையில் கிருபாகரன் மீது ரத்தினகிரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி