உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவல் துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து உலக மகளிர் தினம் விழா கொண்டாடப்பட்டது.
இதில் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள், இஸ்லாமிய மகளிர் கல்லூரி மற்றும் ஜெயின் மகளிர் கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று வாக்குத்தான் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கி கோணமேடு, பெருமாள்பேட்டை வழியாக சென்று நியூடவுன் பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கே மகளிர் தின விழா குறித்து கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பெண்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது பெண்கள் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 1990 மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 181 என்ற எண்களையும் காவலன் ஆப்பை பயன்படுத்தி காவல்துறையை அழைக்கலாம் என்று கல்லூரி மாணவிகளுக்கு அறிவுறுத்தினர். இறுதியாக கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.