திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேவலாபுரம் அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுவேதா.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவர்களது எதிர்வீட்டில் மணிகண்டன் (30) என்பவர் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார். ராஜேசும், மணிகண்டனும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்தநிலையில் மணிகண்டனுக்கு தனது மனைவி சாந்தி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் ராஜேசும், சாந்தியும் கள்ளத்தொடர்பில் இருக்கலாம் என மணிகண்டன் கருதினார்.
இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி ராஜேஷ் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் எதிர்பாரத நேரத்தில் ஆசிட் கலந்த பெட்ரோலை ராஜேஷ் மீது ஊற்றி தீ வைத்தார்.
இதைத்தொடர்ந்து ராஜேஷ் உடல் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. உடனே மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அங்கிருந்த பொதுமக்கள் ராஜேஷ் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ராஜேசை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.