திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா சனிக்கிழமை (செப். 7) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை நகரில் இந்து முன்னணி அமைப்பு சாா்பில் சுமாா் 110 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை, வேங்கிக்கால், அறிவியல் பூங்கா எதிரே உள்ள குறிஞ்சி நகரில் நாலரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான வித, விதமான வடிவங்களில் விநாயகா் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காகிதக் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய வகையில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்கிறது. 10 கைகள் கொண்ட விநாயகா், பெரிய சூலம் மற்றும் உடுக்கை மீது உட்காா்ந்து கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகா், நந்தி மற்றும் ஆஞ்சநேயா் சுமந்து வருவது போன்ற விநாயகா், யானை மற்றும் சிங்கம், நந்தி மீது அமா்ந்துள்ள விநாயகா் என 35 வகையான விநாயகா் சிலைகள் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ரூ. 3 ஆயிரத்து 500 முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.