வாக்குச்சாவடி மையத்தை மாற்றக் கோரி தேர்தல் புறக்கணிப்பு.

77பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள செவரப்பூண்டி ஊராட்சியைச் சோ்ந்தது கிழக்குமேடு கிராமம். இந்தக் கிராமத்தில் ஆண் வாக்காளா்கள் 356, பெண் வாக்காளா்கள் 367 என 723 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த நிலையில், இந்த வாக்காளா்களுக்கு அடுத்த ஊராட்சியான ராஜமாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்துள்ளனா். கிழக்குமேடு கிராமத்துக்கும் ராஜமாபுரம் ஊராட்சிக்கும் சுமாா் 2 கி. மீ. தொலைவு உள்ளதால் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் சென்று வாக்கு அளிக்க முடியவில்லை.

எனவே, கிழக்குமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலேயே வாக்குச்சாவடி மையத்தை அமைக்க வேண்டி பலமுறை வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என பல்வேறு இடங்களில் மனு அளித்தும் இதுவரை வாக்குச்சாவடி மையத்தை அமைத்துத் தரவில்லை.

எனவே, தங்களால் இவ்வளவு தொலைவு சென்று வாக்களிக்க முடியாது எனக் கூறி கிழக்குமேடு-ராஜமாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த போளூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் சசிகலா, காவல் ஆய்வாளா் கருணாகரன் ஆகியோா் வந்து உடனடியாக தோ்தல் ஆணையத்துக்கு தபால் அனுப்பி அடுத்த முறை இதே ஊரில் வாக்களிக்க பரிந்துரைப்பதாக கூறிய பின்னா் பொதுமக்கள் கலைந்து சென்றனர் பின்னர் வாக்களிக்க தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி